About us

உதவும் கரம்

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் யுத்தத்தினாலும், வறுமையினாலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை முழுவதும் உள்ள சுமார் முப்பத்தைந்து இலட்சம் தமிழர்கள் மத்தியில் குறைந்த பட்சம்(10%) விழுக்காட்டை கொண்ட 3.5 இலட்சம் தமிழர்(10%)வறுமைக்கோட்டின் கீழ் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் கடமையாகும். ஐரோப்பாவிலும், உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இந்த எண்ணிக்கையின் பல மடங்குகளில் காணப்படும் போதிலும் இவர்களின் நிலை இன்னும் மாறாமலிருப்பது வேதனைக்குரியது. எனவே வறுமைக்கோட்டின் கீழே உள்ள இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், இலங்கைத்தமிழர்களின் சமூக, பொருளாதார, மேம்பாட்டை ஏற்படுத்த முறைப்படுத்தப்பட்ட செயற்திறன் மிக்க பலமான கட்டமைப்பு ஒன்று காலத்தின் தேவையாக உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு உதவி தேவைப்படும் மக்களையும், தாயக மக்களுக்கு உதவ விரும்பும் கருணையுள்ளம் கொண்ட நல்லுள்ளங்களையும் இணைப்பதற்காக உதவும் கரம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

logo

நோக்கு

யுத்தத்தினாலும், வறுமையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் இலங்கைவாழ் தமிழர்களின் கல்வி, பொருளாதார சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி பலம் மிக்க தமிழர் சமூகத்தை உருவாக்குதல்.

குறிக்கோள்கள்

  • சுய ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அறிவுமிக்க ஆளுமை நிறைந்த எதிர்கால சந்ததியை உருவாக்குதல்.
  • பின்தங்கிய நிலையில் காணப்படும் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் கல்வியில் உயர் நிலையை அடைய உதவுதல்.
  • நலிவுற்ற, ஆதரவற்ற குடும்பங்களுக்கு வாழ்வதார உதவிகளை அமைத்துக் கொடுப்பதுடன். குழந்தைகளின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்கு உதவுதல்.
  • மக்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுகவாழ்வு செயல்திட்டங்களை முன்னெடுத்தல்.
  • கிராமங்கள் தோறும் முன்பள்ளிகளை வலுவூட்டுவதன் ஊடாக சிறு வயதிலேயே நல்லெண்ணமும், சிந்தனை வளமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல்.
  • வன்னிப் பிராந்தியத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுவதால் விவசாயத்தில் நவீன முறைகளை அறிமுகம் செய்வதுடன் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், சந்தைவாய்ப்பு தொடர்பில் துறைசார் நிபுணர்களின் கருத்தரங்குகள், செயல்முறை பயிற்சிகளின் ஊடாக உற்பத்தியை அதிகரிப்பதுடன் உற்பத்தியாளர்களுக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏற்றுமதி செய்யக்கூடிய பெரும் வணிக தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • உள்ளூர் கிராமப்புற வர்த்தகர்கள் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சிறப்புக் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புக்களை நடத்துவதனூடாக தொழில் திறனை உயர்த்துதல்.
  • முறையான பட்டப்படிப்பு இன்றி வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் கற்கை வகுப்புக்களை ஆரம்பிப்பதன் ஊடாக அவர்களுக்கு பல்வேறுபட்ட வேலைவாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தல்.
  • பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்.
  • ஆதரவற்ற சிறுவர்கள், பெண்கள், முதியோர்களின் நலன்கள் தொடர்பாக கவனம் செலுத்தி பொருத்தமான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்தல்.
  • மது, புகை, போதைப் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடரபில் இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.